Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

பணியாரமும் பாரிஸ்டா காபியும்

இதுபோன்ற தொடர்பு இல்லாத இரு விடயங்களை இணைத்துப் பதிவுகளுக்குத் தலைப்பிடுவது வழக்கமாகிவிட்டது. மன்னிக்கவும். நான் இந்தப் பதிவில் பணியாரத்தைப் பற்றியோ அல்லது பாரிஸ்டா காபியைப் பற்றியோ எழுதவில்லை. இப்படியான தலைப்புகள் வாசகர்களைக் கவர்ந்து இழுக்கின்றனவோ என்னவோ, அடிக்கடி இவை போன்ற தலைப்புகளில் பதிவுகளைப் பார்க்க (சில சமயம் படிக்க) முடிகிறது. ஏதாவது ஒரு பதிவுக்கு இப்படிப்பட்டதொரு தலைப்பை வைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த போது உதித்ததே இந்தப் பதிவு. இங்கே சில தலைப்புகளைப் பதிவிட்டுள்ளேன். அறிவுசார் சொத்துரிமை பற்றிய பயம் இன்றிப் பதிவர்கள் இத்தலைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆந்திரா மீல்ஸும் அல்ஸரும் நானும்

இந்தியாவும் மத நல்லிணக்கமும்

பதிவர்களும் ஒருமைப்பாடும்

தமிழகமும் தண்ணீரும்

ஆஸ்காரும் கோலிவுட்டும்

நடிகைகளும் கலாச்சாரமும் மற்றும் புடவையும்

பெங்காலிகளும் தன்னடக்கமும்

ஒரு நிமிடக் கதை - அடித்தளம்

வெங்கடேசனுக்கு ரொம்ப நாளாவே 'அந்த' ஆசை உண்டு. அதுவும் பக்கத்துவீட்டுக்காரனுக்குத் தன்னைப் பத்தியும் பக்கத்துவீட்டுக்காரனைப் பத்தித் தனக்கும் தெரியாத இந்தப் பட்டணத்தில் இரண்டு வருடங்களாகக் குப்பை கொட்டிக்கொண்டிருப்பவனுக்கு 'அதற்கான' வாய்ப்புகளும், குறைவான முயற்சியில் அது வெற்றி பெறுவதற்கான சாத்தியமும் அதிகம். இன்னும் இரண்டு மாதங்களில் திருமணமாகப் போவதால் அதற்கு முன் எப்படியாவது ஒரு பெண்ணையாவது அனுபவித்து விடவேண்டும் என்கிற அவனது தீராத வேட்கை இன்று கைகூடப் போகிறது. அலுவலக நண்பன் ஒருவன் மூலம் கிடைத்த செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு பெண்ணை அனுப்பவும் சொல்லிவிட்டான். இதோ, இன்னும் இரண்டு மணி நேரத்தில் பெண்ணை அனுப்புவதாக அந்த மாமாவும் சொல்லிவிட்டான். அட்ரஸெல்லாம் கரெக்டா கொடுத்திட்டான் வெங்கடேசன். மனசுக்குள்ள ஜில்லுனு ஒரு சந்தோஷம் லேசாத் தான் இருந்தது. ஏன்னா படபடப்பு அதுக்கு மேல எக்குத்தப்பா இருந்தது. கஷ்டமாத்தான் இருக்கும், ஆனாலும் ஒரு குட்டித் தூக்கம் போட்டா படபடப்பக் குறைக்கலாம்ன்னு நினைச்சு கட்டில்ல சாய்ஞ்சான் நம்ம
வெங்கடேசன்.

அன்று மாலை நாளேட்டில் 'பிம்ப், ப்ராஸ்டிட்யூட், கஸ்டமர் அரெஸ்டெட்'-ன்னு நியூஸ் வந்திருந்தது.
ஊருல பக்கத்து வீட்டு பங்கஜம் எதுத்த வீட்டு அம்புஜத்துக்கிட்ட 'நம்ம இஞ்சினீயரு பையன் பட்டணத்துல பண்ணக் கூடாதத பண்ணி மாட்டிக்கிட்டானாம். அதக்கேட்ட அவுங்கம்மா ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்காங்க' என்று கூறிக்கொண்டிருந்தாள். சம்பந்தம் வேண்டாம்ன்னு பெண் வீட்டுக்காரங்க சொல்லிட்டுப் போனத நினைச்சு வெங்கடேசனோட அப்ப மருகிக்கிட்டிருந்தார். அவரு பொண்டாட்டியப் பாப்பாரா இல்ல மகன ஜாமீன்ல எடுப்பாரா?

திடுக்கிட்டு விழித்த வெங்கடேசன் முதல் வேலையா அந்த மாமாவுக்கு போன் பண்ணி தன்னோட ஆர்டரக் கேன்ஸல் பண்ணினான். சின்ன விஷயத்தக்கூட ஊதிப் பெரிசாக்கும் நாளேடுகளுக்கும், அடுத்த வீட்டுக்கதைகளைப் பேசிப் பொழுதக் கழிக்கும் அம்புஜங்களுக்கும் மானசீகமாய் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பவும் கட்டிலில் சாய்ந்தான்.

இன்னொரு கண்ணன் பாட்டு



தூள் படப் பாடலை 'இது கண்ணன் பாட்டா இல்லையா' என்று ஒரு பதிவர் கலாய்த்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கும் ஒரு பதிவு போடலாமென அரித்தது. இங்கே சொறிந்துகொள்கிறேன்.

ஆத்திக நாத்திக விஷயங்களில் அடிக்கடி நாயடி பேயடி அடித்துக்கொள்ளும் நானும் என் நண்பனும் பறிமாறிக்கொண்ட மின்மடல் இது. நான் நாத்திகன். என் நண்பன் ஆத்திகன்.

நண்பனின் மடல்:


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
Ithu than pattoda arththam,nee sonna arthathayum ithayum compare panni paaru.

எனது மறுமொழி:

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா! கண்ணா!

மலைகளில் (மலையப்பா) மாடுகளை (கோவிந்தா) மேய்த்துத் திரிந்த உன்னிடம் எனது குறைகளைச் சொல்லி என்ன பயன்? உன்னைப் போய் மறை மூர்த்தி என்று சொல்லுகிறார்கள். ஆகவே எனக்கு ஒரு குறையும் இல்லை என்றே உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறது!

நீ வேண்டியவர்களுக்கு வேண்டிய படித் தந்தருள்வாய் என்று ஒரு வழக்கு இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும் (என்றிருக்க)! நான் உன்னிடம் எதையாவது வேண்ட, நீயோ என்னைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட்டால் பின்பு, கண்ணா, 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்று ஆகிவிடும். ஆகவே மறை மூர்த்தியே, எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆளைவிடு!

நீ வகுத்ததாகக் கூறப்படும் வேதங்களை ஓதிக்கொண்டு, இல்லாத உன்னைக் கண்ணாரக் கண்டதாக சொல்லும், தவம் என்ற பெயரில் உட்கார்ந்தே பொழுதைக்கழிக்கும் சோம்பேறி 'ஞானிகள்' சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் (மறைமூர்த்தி & மறை ஓதும்). நீ திரையின் பின் நின்றாலும், சுவற்றின் பின் நின்றாலும் அல்லது நில்லாமலே போனாலும் அது பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை.

ஒரு குன்றின் மேல் கல்லை நட்டுவிட்டு 'நீ' என்கிறார்கள். ஆனால் நீ எங்கும் வாராதவன் (வரதா) என்று பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. கல் எப்போதும் போல் நின்றுகொண்டிருக்கிறது. அதனிடம் அருள் எப்படிக் கிடைக்கும்?

உனது கை கால்களைக்கூட அசைக்க முடியாது நிலையாக நின்று கொண்டிருக்கிறாய். இந்தக் கலிகாலத்தில் எங்களுக்காக மனமிறங்கி அருள் புரியச் சிலை வடிவில் நிற்கிறாய் என்று சமாதானம் கூறுகிறார்கள். ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை நான் இதற்கு முந்தைய அடியிலேயே எனது பாட்டில் கூறிவிட்டேன். நீ எங்களை கவனிப்பதை விட உனது கூந்தலையே(கேஸவா) அதிகம் கவனித்துக்கொள்கிறாய் என்பது எப்போது இந்த மக்களுக்குப் புரியப்போகிறதோ? கண்ணன் இல்லை என்று நான் யாரிடம் சொனனாலும் அதை எவரும் நம்பப் போவதில்லை (யாரும் மறுக்காத). இல்லாத உன்னைத் துதிக்க என்னிடம் நேரமும் இல்லை.

அதிகாலையில் எழுந்து கோலம் போட்டுச் சுத்தமாக வீட்டினை வைத்திருக்கும் பெண்களைத் திருமகள்(மஹாலக்ஷ்மி) என்று கூறுவார்கள். சுறுசுறுப்பாய் இருந்தால் முன்னேற்றமும் செல்வமும் வாராதா பின்னே?

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்கிற அய்யன் திருவள்ளுவனின் வாக்குகிணங்க நான் பாடுபட்டால், உன் மார்பில் குடியிருப்பதாக உருவகப்படுத்தப்படும் திருமகள் எங்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுக்கமாட்டாளா என்ன?

மறைந்து உள்ள செய்தி : எதிர் காற்று

சற்றே நிதானித்துச் சிந்தியுங்கள். தில்லிப் பணக்காரர்களுக்குப் பொதுவாகவே ஓர் அசைக்க முடியாத எண்ணம், அதாவது பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும் கூறுகிறேன். டெல்லி ஜல் போர்டு (தில்லித் தண்ணீர் வாரியம்) வழங்கும் குடிநீரில் 45 சதவீதம் களவு போகிறது. தில்லிப்பணக்காரர்களின் குலத்தொழில்களில் ஒன்று அடுக்குமாடி வீடு கட்டி வாடகைக்கு விடுவது அல்லது தனது வீட்டிலேயே மாடி மேல் மாடி கட்டி வாடகைக்கு விடுவது. இதற்காக இவர்கள் களவாடும் தண்ணீரே அந்த 45%.

அதுமட்டுமல்ல, பொதுவாகவே, தில்லி மக்களிடம் ஒரு வகையான காட்டுமிராண்டி கலாச்சாரத்தைக் காணலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் துப்புதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், போலீசிடம் மரியாதை இன்றிப் பேசுதல், பேருந்துகளில் பயணச்சீட்டு எடுக்காவிட்டாலும் அதைப்பற்றி எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாதிருத்தல் போன்றவை சில உதாரணங்கள்.

இதில் பணக்காரர்கள் செய்யும் குற்றங்கள் தனிரகம். ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகளைக்கட்டுவது, லஞ்சம் தாராளமாகக் கொடுப்பது, எங்கெங்கு தேவையோ அங்கங்கெல்லம் அரசியல்வாதிகளின் பெயரை உபயோகிப்பது, வாடகை வாங்குவதைப் பெருமளவு மறைப்பது, தான் மாடியில் குடியிருந்துகொண்டு கீழ் போர்ஷனைக் கடைகளுக்கு வாடகைக்கு விடுவது போன்றவை சில உதாரணங்கள்.

இப்போது பற்றி எரியும் கடைகள் இடிப்புப் பிரச்சினை என்பது கடைசியாகச் சொல்லப்பட்ட உதாரணத்தால் தான். லாஜ்பத்நகர் போன்ற பகுதிகளில் அகதிகளாக வந்து அரசிடமிருந்து வீடுகள் பெற்றவர்கள் பலர். இவர்கள் வணிக நோக்கத்துடன் தங்களது குடியிருப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தங்களது குடியிருப்புகளைக் கடைகளுக்காக வாடகைக்கு விட்ட இவர்கள் அதில் வரும் லாபத்தைப் பார்த்துப் பின் தாங்களே தொழில் தொடங்கிக் கடைகளை ஆரம்பித்தார்கள். அவ்வாறு தோன்றியவையே டெல்லியின் பெரும்பாலான மார்க்கெட்டுகள்.

நீதிமன்றம் இடிக்க ஆணையிட்டதும் இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் உண்டாக்கப்பட்ட வணிக வளாகங்களே. மாநகராட்சி சிறுக சிறுகச் செய்த தவறுகள் தற்போது பூதாகாரமாக எழுந்து அவர்களையே மிரட்டுகிறது. கண்துடைப்பு ஆக்கிரமிப்பு நாடகங்களை நடத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்துப் பின் நீதிமன்றத்திடமிருந்து சரியான குட்டும் வாங்கியது.அதன் பிறகு வேறு வழியில்லாமல் சில மாநகராட்சிப் பொறியாளர்கள் மீது பணி இடைநீக்கம், பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.

நீதிமன்றம் கடுமை காட்டியதும் தற்போது மீண்டும் தான் லஞ்சம் வாங்கிகொண்டு அனுமதி அளித்த கட்டிடங்களையே இடிக்கப் புறப்பட்டுவிட்டது.

உண்மைகள்:

1. 2010-ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லி நகரம் சிலவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வாறு செய்யாவிடில் ஒருவேளை காமன்வெல்த் போட்டிகள் ரத்தாகலாம். அது தேசத்துக்கு அவமானம். (இல்லாவிட்டால் இவ்வளவு வருடங்களாக இயங்கிவந்த மார்க்கெட்டுகளை இப்போது இடிக்க என்ன அவசியம் வந்தது?)

2. நேரடியாக அறிவிக்க முடியாவிடில் அரசியல்வாதிகள் கோர்ட் மூலமாகச் செய்து விடுவார்கள் (உதாரணம்: வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலாக சி.என்.ஜி (இயற்கை எரிவாயு) பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி கோர்ட் சில வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பு)

3.லஞ்சம் என்னும் மலத்தை உண்டுவிட்டு அரசு ஊழியர்கள் நாம் விரும்பியதைச் செய்து கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அந்த மலம் நம் முகத்திலேயே மீண்டும் வந்து விழும்போது உத்தமன் போல ஆர்ப்பட்டம் போராட்டம் எல்லாம் பண்ணக்கூடாது.

தில்லி போலீசின் லட்சணம்!

ஆள்வோரின் அடிவருடிகளாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் தில்லிப் போலீசார். பொதுமக்களுடனான தில்லிப் போலீசாரின் சட்டாம்பிள்ளைத் தனமான போக்கு நாம் நன்கறிந்ததே. அரியானாக்காரர்கள் அதிகமாகக் காவல்துறையில் இருப்பது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. குர்காவ்னில் அரியாணா போலீஸ்காரர்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதமே இதற்குச் சாட்சி. (கொலை கொள்ளைக்காரர்களிலும் அரியானாக்காரர்களின் சதவீதம் அதிகமைய்யா!)

அரசியல்வாதிகளிடம் நயமாக நடந்துகொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தில்லி காவல்துறைக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அதை நூறு சதவீதம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளும் தில்லிப் போலீசார் அரசியல்வாதிகள் பொதுமக்களின் ரெப்ரெசென்டேட்டிவ்கள் என்று வேறு சப்பைக்கட்டுக் கட்டிஇருக்கிறார்கள். இதுவரை தில்லிப் பணக்காரர்களின் கறுப்புத்தொழில்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்துவரும் தில்லிப் போலீசார் (ஆதாரம் : கண்துடைப்பு ஆக்கிரமிப்பு இடிப்புகளும் தில்லி நீதிமன்றம் அதுபற்றி வெளியிட்ட அதிருப்தியும். என்னதான் மாநகராட்சி காரணமென்றாலும், காவல்துறையின் முழு ஒத்துழைப்பு அனைத்து அட்டூழியங்களிலும் உண்டு. ), இனி முன்னைவிட நன்றாக அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறிந்துவிடப் போகிறார்கள்.

தில்லித் தனியார் பேருந்துகளில் இரண்டு ரூபாய்க்கு டிக்கட் எடுக்க வக்கில்லாது "முஜே மந்த்ரி பதா ஹே" (எனக்கு மந்திரியைத் தெரியும்) என்று கண்டக்டரை மிரட்டும் சல்லித்தனமானவன் இனித் தன் குரலை ஓங்கி ஒலிக்கப் போகிறான்.

ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்றது.
யாருக்கும் வெட்கமில்லை!

உடன்பிறவாக் குண்டுகள்

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு லாரியில் அனுப்பபட்ட 600 ராக்கெட் குண்டுகளை ஆந்திரப்போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுகள் யாரால் யாருக்காக மற்றும் எதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இது பற்றி அரசியல் தலைவர்கள் என்ன கருத்துக்களைச் சொல்லுவார்கள் என்று கற்பனை குதிரையைக் கேட்ட போது:

கருணாநிதி:
சில நாட்களுக்கு முன் தேச விரோத சக்தி ஒன்று நாட்டைத்துண்டாட எண்ணம் கொண்டு ஆயுதம் ஏந்தியும் போரிடத் தயார் என்று முழங்கிற்று. அதற்கும் இந்தக் குண்டுகளுக்கும் மற்றும் வேறு ஏதாவது 'உடன்பிறவா குண்டுகளுக்கும்' தொடர்பிருக்கிறதா என்று எனது திமுக தலைமையிலான மெஜாரிடி அரசு சகோதர பாசத்தைத் துறந்துவிட்டு ஆராய்ந்து வருகிறது.

ஜெயலலிதா:
இன்னும் சில நாட்களில் நான் ஐதராபாத் சென்று ஓய்வு எடுக்கப்போவதைத் தனது உளவுத்துறைப் போலீசார் மூலம் தெரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் என்னைக் கொல்வதற்காக அனுப்பி வைத்த குண்டுகளே ஆந்திரப் போலீஸார் கைப்பற்றியவை. இன்னும் சில நாட்களில் தனது மைனாரிடி திமுக ஆட்சி கவிழ்ந்துு அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதைதெரிந்து கொண்ட கருணாநிதி நான் மீண்டும் முதலமைச்சாராகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்த சூழ்ச்சியே அந்தக்குண்டுகள். அந்தக்குண்டுகளை பன்னீர்ச்செல்வத்தின் வீட்டிலிருந்து கைப்பற்றியதாக பத்திரிக்கைகளுக்குச் செய்தி தருமாறு டெல்லியிலிருந்து தயாநிதி மாறனும் சிதம்பரமும் கருணநிதியிடம் கூறியிருப்பதால் தமிழக மக்களை 'நமது எம்ஜிஆர்' நாளேட்டினைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

வைகோ:
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தயாநிதிமாறன் தலைமையிலான கூட்டம் ஒன்று என்னைக்கொல்லக் கூலிப்படையாம் குண்டர் படையை ஏவியிருக்கிறது என்று கூறினேன். தனது திட்டம் அம்பலமாகிவிட்டது தெரிந்த அந்தக்கூட்டம் இப்போது குண்டர்களுக்குப் பதிலாக குண்டுகளை ஏவிப்பார்க்க நினைக்கிறது. இந்த மறத்தமிழன் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டான். நேருக்கு நேர் ஆண்மகனாக வந்தால் குண்டுகளை மார்பில் தாங்கித் தமிழரின் மானம் காப்பேன். இந்தக்குண்டுகளை எனது செங்குருதி சிந்தியாவது ஈழம் சென்று சேர்ப்பேன்.

தமிழன் சினிமாவின் பின்னாலா?

வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தவர்களில் நானும் ஒருவன். பொதுவாக வெளிமாநிலக்காரர்களுக்கு ஒரு அபிப்பிராயம். அதாவது தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் சினிமாவைக்கட்டி அழுபவர்கள், சினிமாவுக்குத் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று.

எனது அலுவலகத் தோழர்கள் அடிக்கடி இந்தக்கருத்தினை முன்னிறுத்தி அவர்களுக்குள்ளாகப் பேசிகொள்ளுவார்கள். நான் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவேன். ஆனால் ஒருமுறை எனக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது (தமிழ் ரத்தம் சூடேறிக் கொதித்துவிட்டது!). கோபத்தில் நான் அவர்களிடம் சொன்னதன் சாராம்சம் இங்கே.

அண்ணாத்துரையோ, கருணாநிதியோ எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, அல்லது விஜயகாந்தோ ஒரு இரவில் அரசியலில் நுழைந்து மறுநாள் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகவில்லை. (ஹேமாமாலினி மற்றும் சிலரைப் போல! (அவரும் ஒரு தமிழரே)).
1980-களில் வந்த ஒரு குமுதம் அந்தக்கால சினிமா ரசிகர்களை பற்றிய கருத்துக்கணிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களில் 47% சிவாஜி ரசிகர்கள் என்றும், 45% எம்ஜிஆர் ரசிகர்கள் என்றும் மற்ற நடிகர்களுக்கு எஞ்சிய 3% ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. ஆனால், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார்; நாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்; சிவாஜி (பின்னாளில்) கட்சி ஆரம்பித்தார்; அவரை முழுவதுமாக நிராகரித்தோம் (கையைச் சுட்டுக்கொண்டதால், அவர் தனது கட்சியைக்கலைத்தும் விட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்).

இப்போது சமீபத்தில் ரஜினியின் வாய்ஸ் என்ன ஆனது என்பதை நான் உங்களுக்குச்சொல்ல வேண்டியதே இல்லை (ரஜினி ரசிகர்களே, பொறுத்தருள்வீர்).

செய்தி என்னவெனில், தமிழர்களுக்கு யாரை எடுப்பது யாரை விடுப்பது என்று நன்றாகத்தெரியும்.

சுதந்திரம் அடைந்தபின் அமைந்த மத்திய அரசுகளில் இடம்பெற்றவர்களில் அநேகம் பேர் வட மாநிலத்தவர்களே. ஆனால் பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு எல்லாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கியே உள்ளன.

சினிமாக்காரர்களை அவ்வளவாக மதிக்காத கேரளமும் மேற்கு வங்காளமும் தமிழகத்தை விடச் சொல்லிக்கொள்ளும்படியாகப் பெரிதாக ஒன்றும் முன்னேறிவிடவில்லை.

யார் நம்மை ஆண்டாலும் முன்னெற்றமும் தாழ்வும் நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மிகவும் நன்றாக அறிவோம்.

எத்தனை விதங்களில் மனிதர்கள்?!

அனைவருக்கும் எனது வணக்கம்,

இது எனது முதல் பதிப்பு.
வலை மூலம் நம்மை ஒன்றிணைத்த தமிழ் மணத்துக்கு எனது உளங்கனிந்த நன்றி.

எனக்கு ஒரு 17 வயது இருக்கும். அப்போது நமது சென்னைத்தொலைக்காட்சியில் (தற்போதைய பொதிகைத் தொலைக்காட்சி) வரும் இந்தப் பாடல் எந்தவொரு காரணமும் இன்றி அப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை எழுதிய கவிஞர் பஞ்சு அருணாச்சலம் என்று நினைக்கிறேன். இசை அமைப்பாளர் யார் என்பது மறந்துவிட்டது. சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய இந்தப்பாடலை இன்றும் நான் முனுமுனுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்து, பழகி ஓரளவு உலகஞானம் பெற்ற பின்பு இந்தப் பாடலின் பொருளும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதமும் பொருந்தி வருவதையும், கவிஞரின் மனக்குமுறலையும் அறிந்தேன். இதோ அந்தப் பாடல் வலைஞர்களுக்காக.

எத்தனை விதங்களில் மனிதர்கள்
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
என்னென்ன ரகங்கள் என்னென்ன குணங்கள்
அத்தனை விசித்திர மனிதர்கள்

நேரில் பார்த்தால் சிரிக்கிறார் - அந்த
சிரிப்பு தான் நிஜமா?
நேசத்தோடு அணைக்கிறார் - அந்த
அணைப்பு தான் நிஜமா?
பேசும் வார்த்தை நல்ல வார்த்தை போகட்டும் பழகு
நல்லவனாய் நீ உள்ளவரை
ஒரு சஞ்சலம் உனக்கேது?

(எத்தனை....)

உறவைச் சொல்லி வருகிறார் - அந்த
உரிமை தான் பெரிது
மறைந்து நின்று எதிர்க்கிறார் - தினம்
மயங்கலாம் மனது
மோதிப் பார்த்தால் சேதமாகும் வாழட்டும் உறவு
மௌனத்தினால் பகை வெல்வது தான் இங்கு உத்தமர் வரலாறு