Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

பணியாரமும் பாரிஸ்டா காபியும்

இதுபோன்ற தொடர்பு இல்லாத இரு விடயங்களை இணைத்துப் பதிவுகளுக்குத் தலைப்பிடுவது வழக்கமாகிவிட்டது. மன்னிக்கவும். நான் இந்தப் பதிவில் பணியாரத்தைப் பற்றியோ அல்லது பாரிஸ்டா காபியைப் பற்றியோ எழுதவில்லை. இப்படியான தலைப்புகள் வாசகர்களைக் கவர்ந்து இழுக்கின்றனவோ என்னவோ, அடிக்கடி இவை போன்ற தலைப்புகளில் பதிவுகளைப் பார்க்க (சில சமயம் படிக்க) முடிகிறது. ஏதாவது ஒரு பதிவுக்கு இப்படிப்பட்டதொரு தலைப்பை வைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த போது உதித்ததே இந்தப் பதிவு. இங்கே சில தலைப்புகளைப் பதிவிட்டுள்ளேன். அறிவுசார் சொத்துரிமை பற்றிய பயம் இன்றிப் பதிவர்கள் இத்தலைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆந்திரா மீல்ஸும் அல்ஸரும் நானும்

இந்தியாவும் மத நல்லிணக்கமும்

பதிவர்களும் ஒருமைப்பாடும்

தமிழகமும் தண்ணீரும்

ஆஸ்காரும் கோலிவுட்டும்

நடிகைகளும் கலாச்சாரமும் மற்றும் புடவையும்

பெங்காலிகளும் தன்னடக்கமும்

ஒரு நிமிடக் கதை - அடித்தளம்

வெங்கடேசனுக்கு ரொம்ப நாளாவே 'அந்த' ஆசை உண்டு. அதுவும் பக்கத்துவீட்டுக்காரனுக்குத் தன்னைப் பத்தியும் பக்கத்துவீட்டுக்காரனைப் பத்தித் தனக்கும் தெரியாத இந்தப் பட்டணத்தில் இரண்டு வருடங்களாகக் குப்பை கொட்டிக்கொண்டிருப்பவனுக்கு 'அதற்கான' வாய்ப்புகளும், குறைவான முயற்சியில் அது வெற்றி பெறுவதற்கான சாத்தியமும் அதிகம். இன்னும் இரண்டு மாதங்களில் திருமணமாகப் போவதால் அதற்கு முன் எப்படியாவது ஒரு பெண்ணையாவது அனுபவித்து விடவேண்டும் என்கிற அவனது தீராத வேட்கை இன்று கைகூடப் போகிறது. அலுவலக நண்பன் ஒருவன் மூலம் கிடைத்த செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு பெண்ணை அனுப்பவும் சொல்லிவிட்டான். இதோ, இன்னும் இரண்டு மணி நேரத்தில் பெண்ணை அனுப்புவதாக அந்த மாமாவும் சொல்லிவிட்டான். அட்ரஸெல்லாம் கரெக்டா கொடுத்திட்டான் வெங்கடேசன். மனசுக்குள்ள ஜில்லுனு ஒரு சந்தோஷம் லேசாத் தான் இருந்தது. ஏன்னா படபடப்பு அதுக்கு மேல எக்குத்தப்பா இருந்தது. கஷ்டமாத்தான் இருக்கும், ஆனாலும் ஒரு குட்டித் தூக்கம் போட்டா படபடப்பக் குறைக்கலாம்ன்னு நினைச்சு கட்டில்ல சாய்ஞ்சான் நம்ம
வெங்கடேசன்.

அன்று மாலை நாளேட்டில் 'பிம்ப், ப்ராஸ்டிட்யூட், கஸ்டமர் அரெஸ்டெட்'-ன்னு நியூஸ் வந்திருந்தது.
ஊருல பக்கத்து வீட்டு பங்கஜம் எதுத்த வீட்டு அம்புஜத்துக்கிட்ட 'நம்ம இஞ்சினீயரு பையன் பட்டணத்துல பண்ணக் கூடாதத பண்ணி மாட்டிக்கிட்டானாம். அதக்கேட்ட அவுங்கம்மா ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்காங்க' என்று கூறிக்கொண்டிருந்தாள். சம்பந்தம் வேண்டாம்ன்னு பெண் வீட்டுக்காரங்க சொல்லிட்டுப் போனத நினைச்சு வெங்கடேசனோட அப்ப மருகிக்கிட்டிருந்தார். அவரு பொண்டாட்டியப் பாப்பாரா இல்ல மகன ஜாமீன்ல எடுப்பாரா?

திடுக்கிட்டு விழித்த வெங்கடேசன் முதல் வேலையா அந்த மாமாவுக்கு போன் பண்ணி தன்னோட ஆர்டரக் கேன்ஸல் பண்ணினான். சின்ன விஷயத்தக்கூட ஊதிப் பெரிசாக்கும் நாளேடுகளுக்கும், அடுத்த வீட்டுக்கதைகளைப் பேசிப் பொழுதக் கழிக்கும் அம்புஜங்களுக்கும் மானசீகமாய் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பவும் கட்டிலில் சாய்ந்தான்.

இன்னொரு கண்ணன் பாட்டு



தூள் படப் பாடலை 'இது கண்ணன் பாட்டா இல்லையா' என்று ஒரு பதிவர் கலாய்த்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கும் ஒரு பதிவு போடலாமென அரித்தது. இங்கே சொறிந்துகொள்கிறேன்.

ஆத்திக நாத்திக விஷயங்களில் அடிக்கடி நாயடி பேயடி அடித்துக்கொள்ளும் நானும் என் நண்பனும் பறிமாறிக்கொண்ட மின்மடல் இது. நான் நாத்திகன். என் நண்பன் ஆத்திகன்.

நண்பனின் மடல்:


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
Ithu than pattoda arththam,nee sonna arthathayum ithayum compare panni paaru.

எனது மறுமொழி:

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா! கண்ணா!

மலைகளில் (மலையப்பா) மாடுகளை (கோவிந்தா) மேய்த்துத் திரிந்த உன்னிடம் எனது குறைகளைச் சொல்லி என்ன பயன்? உன்னைப் போய் மறை மூர்த்தி என்று சொல்லுகிறார்கள். ஆகவே எனக்கு ஒரு குறையும் இல்லை என்றே உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறது!

நீ வேண்டியவர்களுக்கு வேண்டிய படித் தந்தருள்வாய் என்று ஒரு வழக்கு இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும் (என்றிருக்க)! நான் உன்னிடம் எதையாவது வேண்ட, நீயோ என்னைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட்டால் பின்பு, கண்ணா, 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்று ஆகிவிடும். ஆகவே மறை மூர்த்தியே, எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆளைவிடு!

நீ வகுத்ததாகக் கூறப்படும் வேதங்களை ஓதிக்கொண்டு, இல்லாத உன்னைக் கண்ணாரக் கண்டதாக சொல்லும், தவம் என்ற பெயரில் உட்கார்ந்தே பொழுதைக்கழிக்கும் சோம்பேறி 'ஞானிகள்' சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் (மறைமூர்த்தி & மறை ஓதும்). நீ திரையின் பின் நின்றாலும், சுவற்றின் பின் நின்றாலும் அல்லது நில்லாமலே போனாலும் அது பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை.

ஒரு குன்றின் மேல் கல்லை நட்டுவிட்டு 'நீ' என்கிறார்கள். ஆனால் நீ எங்கும் வாராதவன் (வரதா) என்று பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. கல் எப்போதும் போல் நின்றுகொண்டிருக்கிறது. அதனிடம் அருள் எப்படிக் கிடைக்கும்?

உனது கை கால்களைக்கூட அசைக்க முடியாது நிலையாக நின்று கொண்டிருக்கிறாய். இந்தக் கலிகாலத்தில் எங்களுக்காக மனமிறங்கி அருள் புரியச் சிலை வடிவில் நிற்கிறாய் என்று சமாதானம் கூறுகிறார்கள். ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை நான் இதற்கு முந்தைய அடியிலேயே எனது பாட்டில் கூறிவிட்டேன். நீ எங்களை கவனிப்பதை விட உனது கூந்தலையே(கேஸவா) அதிகம் கவனித்துக்கொள்கிறாய் என்பது எப்போது இந்த மக்களுக்குப் புரியப்போகிறதோ? கண்ணன் இல்லை என்று நான் யாரிடம் சொனனாலும் அதை எவரும் நம்பப் போவதில்லை (யாரும் மறுக்காத). இல்லாத உன்னைத் துதிக்க என்னிடம் நேரமும் இல்லை.

அதிகாலையில் எழுந்து கோலம் போட்டுச் சுத்தமாக வீட்டினை வைத்திருக்கும் பெண்களைத் திருமகள்(மஹாலக்ஷ்மி) என்று கூறுவார்கள். சுறுசுறுப்பாய் இருந்தால் முன்னேற்றமும் செல்வமும் வாராதா பின்னே?

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்கிற அய்யன் திருவள்ளுவனின் வாக்குகிணங்க நான் பாடுபட்டால், உன் மார்பில் குடியிருப்பதாக உருவகப்படுத்தப்படும் திருமகள் எங்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுக்கமாட்டாளா என்ன?